செவ்வாய், 5 ஜூலை, 2011

வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை














-பெண்ணியா

தேர்தலுக்கான
மிக மோசமான ஒரு நாளில்
எனது வாக்களிக்கும்
சுதந்திரத்தினை
மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்.
பாதுகாப்பற்ற கதவுகளில்
பூட்டைப் பூட்டியபின்
அரசியல் வன்முறைகளும்
அடியாட்களின்
உக்கிரமான பார்வைகளும்
நிரம்பிய தெருவில்
என் வாக்குச் சீட்டை
இறுக்கமாய்ப் பற்றியபடி
வீட்டின் தெருமுனையைத் தாண்டித் திரும்புகையில்
வாக்களித்த பெண்கள் பலர்
இன்று சமைக்கும் உணவு பற்றிய
தீவிர உணர்வோடு
நடையின் வேகத்தை அதிகரித்துக் கடக்கின்றனர்.
இருப்பினும்
என் ஓட்டைப் பத்திரமாகப் பிடித்தபடி
வாக்களிப்பு நிலையத்தை அடைகிறேன்
என் வாக்குச்சீட்டைப் பெற்று
அதை நான்காய்க் கிழித்து
பெட்டியினுள் போட்ட பின்
என் வாக்குரிமையைப்
பாதுகாத்த பெருமிதத்தோடு
பாதுகாப்பற்ற தெருவின்
அத்தனை உக்கிரங்களையும் கடந்து
பயம் பூசியிருக்கும் வீட்டின் கதவுகளைத்
திறந்து விட்டிருக்கிறேன்
சுதந்திரமாய்.


கலைமுகம், ஏப்ரல் - யூன் 2011.

எனது எண்ணங்கள் எழுத்துக்கள்












இன்றுமுதல் எனது எழுத்துக்களையும் வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெண்ணியா