சனி, 6 ஆகஸ்ட், 2011

Mama



-பெண்ணியா

ஒரு முறை முத்தமிட்டேன்
பிறகு நடந்து கொண்டே இருந்தேன்
திரும்பிப் பார்க்காமல்
நடந்து கொண்டே இருந்தேன்.
உனது காலடியில் இருந்த
எனது நாட்களுக்குள்.
நினைத்துப் பார்க்கிறேன்
இந்த எனது அவளின் கண்களை
இறைவன் எனக்குத் தந்து விட்டதாய்
காணும் எல்லாப் பொருட்கள் மீதும்
கருணை வழிந்து கொண்டே இருக்கிறது
எரிந்து விழும் எவரின் மீதும்
கோபம் எழுவதேயில்லை.
லேசாய் புன்முறுவலிக்கிறேன்
எதையோ கண்டுபிடிக்க முடியாத ஒன்றை
எப்போதும் தனக்குள்ளேயே வைத்திருக்கும்
உம்மாவைப்போல்.
பிறகு ஒரு தரம்
வெளிச்சம் அதிகமாய் இருந்த
ஒரு பகல் பொழுதில்
கடவுள் எனது தாயின் உருவை
எனக்கு வழங்கி விட்டான்
ஒரு Insulin ஐ
நாங்கள் போட்டுக் கொள்வதைப்போல்
அதிகமான நோய்களுக்குள்
நாங்கள் அகப்படுவதைப்போல்
28 வயதில்
எனது உம்மா இருந்ததைப்போல்.
மிதமான சருகுகளில்
அவள் நடக்கத் தொடங்கும்
நாட்கள் வரும்
முடிகள் அதிகமாய் நரைத்த பின்
அவள் அதிகமாய் பேசத் தொடங்கும் காலம் வரும்
ஒரு House court ஐ
நாங்கள் அணிந்து
இருவரும் நடக்க நினைக்கும்
ஒரு சாலை
எங்கேயோ ஒரு இடத்தில்
எங்களுடைய ஒரு Walking க்காக
காத்துக் கிடக்கும்.


காலம் செப் 2011

திருடப்படுதல்



-பெண்ணியா

நெஞ்சும் வயிறும் பற்றி எரிந்தது
எனக்கு விருப்பமானவனின்
காதலை
இன்னொருத்தி திருடியதைப்போலிருந்தது
விருப்பமற்றவனின் முகத்தை
முத்தமிட்டதைப் போலிருந்தது
என் செல்ல நாய்க்குட்டியை
யாரோ கொன்றதைப் போல் …
என் குளிப்பறையை
யாரோ உற்றுப் பார்ப்பதைப்போல்
உள்ளாடைகளை சலவைக்காரன்
துணிகளோடு எடுத்துச் சென்றதைப்போல்
ஒவ்வொரு நிமிடமும்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
அந்தரங்க வாழ்வின் மீது
அத்தனை விருப்பமின்மைகளும்.

காலம் செப் 2011